ராணிபேட்டை மாவட்டம் சென்னை - ஆந்திரா தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர்.
ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே சென்னை - ஆந்திரா தேசிய நெடுஞ்சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் சிமெண்ட் தடுப்புச் சுவரின் மீது சித்தூர் பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சிமெண்ட் கான்கிரீட் சுவரில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்து முன்பக்கம் இருந்த இரண்டு சக்கரங்கள் மற்றும் என்ஜின் பாகங்கள் முற்றிலுமாக சேதமடைந்தது. மேலும் பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்த நிலையில் வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் படுகாயமடைந்த 4 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு அடுக்கும்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ராணிப்பேட்டை காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்து பின்னர் கான்கிரீட் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான அரசு பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சாலையை முறையாக விரிவு படுத்தாமலேயே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதால் தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.