திருச்சியில் இளைஞர்கள் சிலர் கொள்ளிடம் ஆற்று பாலத்தின் தடுப்புச் சுவற்றில் இருசக்கர வாகனத்தை இயக்கியும், சாகசம் செய்தும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி ஒத்தக்கடையில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஏராளமான இளைஞர்கள் திருச்சி மாநகருக்குள் புகுந்து பொதுமக்கள் சொல்ல முடியாத வகையில் பல்வேறு விதமான தொந்தரவுகளை கொடுத்தனர்.
திருச்சி மாநகருக்குள் வரும் பொழுது, புறநகர் பகுதிகளில் அவர்கள் செய்த அட்ரா சிட்டிகள் ஏராளம். கொள்ளிடம் பாலத்தின் மையத்தில் அமைக்கப்பட்டு உள்ள தடுப்பு கட்டைகளின் மேலே இருசக்கர வாகனத்தை தூக்கி வைத்து ஒருவர் சர்க்கஸில் சாகசம் செய்வது போல இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார்.
undefined
அதனை இரண்டு புறமும் செல்போனில் சிலர் பதிவு செய்துள்ளனர். கொள்ளிடம் பாலத்தில் இவர்கள் செய்த குரங்கு சேட்டையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநகர்களுக்குள் வருவதற்குள் கொள்ளிடம் பாலம் முழுவதும் பல்வேறு விதமான ஆட்டம், பாட்டம், சாலையை மறிப்பது, பேருந்து முன் தண்டால் எடுப்பது என பல விதமான அலப்பறைகளில் ஈடுபட்டனர்.
கொள்ளிடம் பாலத்தின் மேலே உள்ள சிமெண்ட் கட்டையில் ஏறி கொடியை வைத்து ஆட்டுவது, உள்ளிட்ட பல்வேறு விதமான செயல்களில் அவர்கள் ஈடுபட்டது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதும் இவர்களை காவல்துறையினர் ஏன் கண்டு கொள்ளவில்லை? நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் பொதுமக்கள் முன் வைத்துள்ளனர்.