திருச்சியில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரச்சாரத்தில், கமல் மீது இளம்பெண் புத்தகங்களை வீசினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை பகுதியில் நடந்த மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டத்தில் கமல் ஹாசன் பேசிக்கொண்டிருக்கும் போது, மேடைக்கு அருகே நின்று கொண்டிருந்த பெண் கூச்சலிட்டு கொண்டிருந்தார். அப்போது அவர் திடீர் தன்னுடைய கையில் வைத்திருந்த பாரதியாரின் புத்தகம் மற்றும் புகைப்படத்தையும் கமலை நோக்கி வீசி எறிந்தார். தொடர்ந்து அவர் எனக்கு நியாயம் வேண்டும் என்று கூச்சலிட்டார். அவரை அமைதியாக இருக்குமாறு கமல் சைகையில் கூறினார். அவரை சமாதானப்படுத்த நிர்வாகிகளும் முயன்றனர். ஆனாலும் அந்த பெண் கட்டுப்படாமல் தொடர்ந்து கூச்சலிட்டதால் செய்வதறியாத கமல், அவரை பார்த்து மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது போல் சைகை காட்டி சென்றார்.
undefined
இதையடுத்து செய்தியாளர்களிடம் பாய்ந்து வந்த அந்த பெண், நான் ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த மநீக நிர்வாகி என்றும், மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்கு சேகரித்து வருவதால், எனக்கு பிற கட்சிகளிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாகவும் குற்றச்சாட்டினார். என்னோடு குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, எனக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுபற்றி கமலிடம் முறையிட சென்றால் நான் மனநலம் பாதிக்கப்பட்டவள் என கூறுகிறார்கள் என கூறினார்.
அப்போது அங்கிருந்த மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் குறிப்பிட்ட பெண்ணிடம் ஏதோ கூறி அங்கிருந்து அவரை இழுத்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த பத்திரிகையாளர்கள் அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்ற போதும் அவர்களை மநீம நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். பெண் உரிமை குறித்து மேடைக்கு மேடை பிரசாரம் செய்யும் கமல் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் இளம் பெண்ணிடம் நடந்து கொண்ட விதம் அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.