திருச்சி சேதுராப்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரியில் 270 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோரதாண்டவம் ஆடிய கொரோனா தொற்றின் வேகம் சற்றே குறைந்துள்ளதாக மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், மீண்டும் கொத்து, கொத்தாக பாதிப்புக்கள் ஏற்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனாவின் கோர பிடியில் சிக்கித் தவித்த உலக நாடுகள் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு தளர்வுகளை அமல்படுத்தின. தமிழகத்தில் கூட பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், ஐ.டி.நிறுவனங்கள் என அனைத்தும் பழைய படி இயங்க ஆரம்பித்தது.
undefined
இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்றின் வேகம் தீவிரமடைந்துள்ளது. தஞ்சாவூர், மன்னார்குடி ஆகிய பள்ளி மாணவிகளைத் தொடர்ந்து அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சி சேதுராப்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரியில் 270 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 14 மாணவர்கள், ஒரு பேராசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 15 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ கல்வி இயக்குநரகத்தின் இயக்குநர் நாராயண பாபு ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 15 பேரும் நலமுடன் இருப்பதாகவும், எவ்வித அறிகுறியும் இன்றி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 15 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.