ஆளுநர் நாகரிகமாக பேச வேண்டும். ஊடகங்களில் வெளிவருவதற்காக அடிக்கை சொறிஞ்சி விட்டார் என்றால் புண்ணாகிவிடும் என திருநாவுக்கரசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
திருச்சி மண்டலம் 5க்கு உட்பட்ட 24வதுவார்டு பகுதியில் உயர் மின் விளக்கு மற்றும் குடிநீர் தொட்டி ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் வார்டில் இருக்கும் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களாக பெற்றார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. கொரோனா காலகட்டத்தில் பத்து கோடி ரூபாய் பிரதமர் நிறுத்திவிட்டார். எனக்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் எல்லா எம்.பி.களுக்கும் அந்த இரண்டு வருடம் எம்பி நிதியிலிருந்து எதுவும் கொடுக்க முடியவில்லை. சென்ற ஆண்டு பிரித்து கொடுத்த நிதியில் இருந்து, இந்த ஆண்டில் இந்த வார்டில் உயர் மின் விளக்கு அமைத்துள்ளோம் குடிநீர் டேங்க் அமைத்துள்ளோம் இதுபோன்று வார்டுகளுக்கு 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை கொடுத்துள்ளோம். கொடுக்காத 33 வார்டுகளுக்கு குடிநீர் தொட்டி பைப் போடுவதற்கு ஒரு கோடி ரூபாய் இந்த வருஷம் நிதியிலிருந்து மாநகராட்சிக்கு கொடுப்பதாக சொல்லி இருக்கிறேன். எந்த கட்சி கவுன்சிலராக இருந்தாலும் அவருக்கு நிதி ஒதுக்கி தரப்படுகிறது. அந்த பணி நடக்கும், அதன் விவரங்கள் கலெக்டரிடம் கொடுக்கப்படும்,” என்றார்.
undefined
மேலும் இதுபோன்று நேரடியாக வார்டு மக்களை சந்தித்து எம்பி நிதியில் இருந்து மட்டும் இல்லாமல் தமிழக அரசு தரக்கூடிய உதவிகள் பெற்று தருகிறோம். வார்டுகளில் என்ன குறை உள்ளதோ அதை மனுவாக பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆளுநர் கருத்து குறித்து பேசிய திருநாவுக்கரசர், “ஆளுநரை பொறுத்தவரை இந்த அரசாங்கத்தை குறை சொல்வது அல்லது முதலமைச்சரை விமர்சனம் செய்வது கொள்கைகளை விமர்சிப்பது போன்ற செயல்களை செய்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நடவடிக்கையும் விமர்சிப்பதால் அதில் அர்த்தமே இல்லை, வரம்பு மீறி ஆளுநர் செயல்படுகிறார். முதலமைச்சர் தொழில் முதலீடு பெறுவதற்காக வெளிநாடு போக கூடாது என்றால்? பிரதமர் வெளிநாடு போகிறாரே அவர் மட்டும் எதற்கு போகிரார்?” என கேள்வி எழுப்பினார்.
“தமிழ்நாடு அரசு நிதியிலிருந்து முதலமைச்சர் என்ற முறையில் செல்கிறார். அனைத்து மாநில முதல்வர்களும் செய்யக்கூடியதுதான் இது. இது சகஜம். இதில் ஆளுநருக்கு என்ன வருத்தம்? என்ன சங்கடம்? அவர் பாக்கெட்டில் இருந்து பணம் கொடுக்கிறாரா? செலவு செய்கிறாரா?” எனவும் திருநாவுக்கரசர் சரமாரியாக கேள்வி ஏழுப்பினார்.
ஆளுநருக்கு இது அழகல்ல என்று குறிப்பிட்ட அவர், அதற்கு ஒரு லிமிட் இருக்கு அந்த லிமிட்டோடு நாகரிகமாக பேசணும் பத்திரிக்கை ஊடகத்தில் வெளிவருவதற்காக அடிக்கடி சொறிஞ்சு விட்டாருன்னா புண்ணாகிவிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மருத்துவ கல்லூரிகளுக்கு ஆய்வு கமிட்டி வந்துள்ளது. சென்னையில் உள்ள கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். விடுபட்ட கல்லூரிகளுக்கு போவார்கள் அதில் எதுவும் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்து தமிழக அரசு அனுமதி பெற முயற்சி செய்ய வேண்டும் என்றும் என்று கூறினார்.