தொடங்கியது 'நெருப்பு வளைய' சூரிய கிரகணம்..! 30 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசயம்..!

By Manikandan S R SFirst Published Dec 26, 2019, 8:47 AM IST
Highlights

சூரிய கிரகணத்தை முன்னிட்டு இன்று கோவில்களில் வழிபாட்டு நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. காலை 5 மணிக்கெல்லாம் நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடந்து 7 .45 மணியளவில் நடை அடைக்கப்பட்டுள்ளது. பின் மீண்டும் மாலை தான் கோவில்கள் திறக்கப்பட இருக்கிறது.

சூரியன், சந்திரன், மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே சந்திரன் வந்து சூரியனை பூமியில் இருந்து காணமுடியாதபடி மறைக்கிறது. அதையே சூரியகிரகணம் என்கின்றனர். இந்த நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இன்று காலை 8.08 மணியில் தோன்றும் சூரிய கிரகணம் 11.19 மணி வரை நீடிக்கின்றது. சந்திரன் முழுமையாக சூரியனை மறைக்கும் நிகழ்வு 9.35 மணி அளவில் தோன்றி 3 நிமிடங்களுக்கு நீடித்திருக்கும். அதன்பிறகு நடுப் பகுதியை மட்டுமே சந்திரன் மறைக்க தொடங்கும். அதனால் சூரியனை சுற்றி நெருப்பு வடிவில் வளையம் தோன்றும். இதையே நெருப்பு வளைய சூரியகிரகணம் என்கின்றனர். 

இன்று நிகழும் சூரிய கிரகணம் தமிழ்நாட்டின் திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர், புதுக்கோட்டை, சென்னை, ஊட்டி மற்றும் கேரளா உட்பட தென்மாநிலங்களில் ஓரளவு தோன்றும். சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு பார்த்தால் கண்களின் விழித்திரை கடுமையாக பாதிக்கப்படும். சூரிய கிரகணத்தை முன்னிட்டு இன்று கோவில்களில் வழிபாட்டு நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. காலை 5 மணிக்கெல்லாம் நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடந்து 7.45 மணியளவில் நடை அடைக்கப்பட்டுள்ளது. பின் மீண்டும் மாலை தான் கோவில்கள் திறக்கப்பட இருக்கிறது.


சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு வாய்ந்த மூன்று தொலைநோக்கிகள் மூலம் சூரிய கிரகணத்தை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல ஊட்டி,கொடைக்கானல், கரூர் உள்ளிட்ட இடங்களிலும் சூரிய கிரகணத்தை தொலை நோக்கிகள் மூலம் மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். அடுத்த சூரிய கிரகணம் 2020 ஜூன் 21 ல் நிகழும்.

click me!