அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வந்தது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. பல முக்கிய அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் சில நாட்களுக்கு முன் மீண்டும் மழை வெளுத்து வாங்கியது.
undefined
இந்தநிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது. தெற்கு அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் கனமழை பெய்ய இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
தலைநகர் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மைய அதிகாரி கூறியிருக்கிறார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 14 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. தற்போது திருச்சி மாவட்டத்தில் பலத்த மழை பெய்கிறது, சமயபுரம், லால்குடி, மண்ணச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. இன்று அதிகாலை முதல் தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.