அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது நிறைவடையும் கட்டத்தில் இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் முதல் பெரும்பாலான மாவட்டங்களில் பருவ மழை கொட்டித்தீர்த்ததை அடுத்து அணைகளுக்கு நீர்வரத்து வேகமாக அதிகரித்தது. மாநிலத்தின் பிரதான அணைகள் பல நிரம்பி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேட்டூர் அணை கடந்த வருடத்தில் மட்டும் நான்கு முறை நிரம்பியுள்ளது. நெல்லை மாவட்டம் காரையார் அணை நிரம்பி தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இன்னும் ஓரிரு தினங்களில் வடகிழக்கு பருவமழை நிறைவடைந்து விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
தலைநகர் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ஒரு சென்டிமீட்டர் அளவில் மழை பதிவாகி இருக்கிறது. தமிழகத்தில் இயல்பை மீறி அதிகளவில் மழை பெய்திருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் மழையின் அளவு மிகவும் குறைவாக பதிவாகி இருக்கிறது. வேலூர்,மதுரை,திருவண்ணாமலை,பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பருவ மழை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.