பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வழிபாடு செய்ய உள்ளதை முன்னிட்டு திருச்சியில் பிரதமரின் வருகைக்காக மாநகரம் தயார் படுத்தப்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். நாளை காலை சென்னை வரும் பிரதமர் அங்கு நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை துவக்கி வைக்கிறார். பின்னர் அங்கு ராஜ் பவனில் ஓய்வெடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் 20ம் தேதி காலை திருச்சி வருகிறார்.
ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷே விழா நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு வருகிறார். மேலும், மோடி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்நிலையில் 108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வருகிற 20ஆம் தேதி சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதனைத் தொடர்ந்து அயோத்தி ராமர் கோவில் விழாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே ஹெலிகாப்டரில் இறங்கி அங்கிருந்து சாலை மார்க்கமாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்த பின்பு மீண்டும் சாலை மார்க்கமாக புறப்பட்டு ஹெலிபேட் உள்ள இடத்திற்கு வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்.
இந்த நிலையில் பிரதமரின் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான ஹெலிகாப்டர் இறங்குதளம் எனப்படும் ஹெலிபேட் அமைக்கும் பணி யாத்திரி நிவாஸ் எதிரே துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த இடத்தை தூய்மைப்படுத்தும் பணியை திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.