"வீரமரணம் அடைந்த உதவி ஆய்வாளர் பூமிநாதனின் மனைவிக்கு ஆறுதல் கூற முடியவில்லை. சமூக விரோதிகளால் நாங்கள் வீழ்ந்தது புதிதல்ல."
சமூக விரோதிகளால் நாங்கள் வீழ்ந்தது புதிதல்ல. ஆனால் நாங்கள் பெரிதும் நேசிக்கும் சிறார்களே இந்த பாதகச் செயலைச் செய்தார்கள் என்பதை எங்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்தவா் எஸ். பூமிநாதன். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆடு திருடா்களை விரட்டிச் சென்றபோது அரிவாளால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொலை தொடர்பாக தஞ்சை மாவட்டம் கல்லணை அருகேயுள்ள தோகூரைச் சோ்ந்த பன்னீர்செல்வம் மகன் மணிகண்டன் (19), அவரது உறவினா்களான புதுகையைச் சோ்ந்த 5, 9 ஆம் வகுப்பு பயிலும் சிறார்கள் என்பது தெரிய வந்தது.
undefined
அவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் அரிவாளையும் காவலர்கள் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட மணிகண்டன் கீரனூா் குற்றவியல் நடுவா் மன்றத்திலும், 2 சிறார்கள் புதுக்கோட்டையில் உள்ள சிறார் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொலை நடந்த ஒரே நாளில் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், திருச்சியில் உள்ள மறைந்த எஸ்ஐ பூமிநாதன் இல்லத்துக்கு இன்று காலை டிஜிபி சைலேந்திர பாபு வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த பூமிநாதன் படத்துக்கு மல்தூவி மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு சைலேந்திரபாபு ஆறுதல் கூறினார். இதனையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பூமிநாதன் ஏற்கனவே தீவிரவாத தடுப்புப் பயிற்சியில் இருந்தவர். சிறந்த பணி செய்ததற்காக முதல்வர் பதக்கத்தையும் பெற்றவர். போலீஸார் ரோந்துப் பணிக்குச் செல்லும்போது ஆயுதங்களைக் கொண்டு செல்ல வேண்டும். தற்காப்புக்காக காவலர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று சைலேந்திரபாபு தெரிவித்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக சைலேந்திரபாபு தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில், “வீரமரணம் அடைந்த உதவி ஆய்வாளர் பூமிநாதனின் மனைவிக்கு ஆறுதல் கூற முடியவில்லை. சமூக விரோதிகளால் நாங்கள் வீழ்ந்தது புதிதல்ல. ஆனால் நாங்கள் பெரிதும் நேசிக்கும் சிறார்களே இந்த பாதகச் செயலைச் செய்தார்கள் என்பதை எங்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.” என்று ஆதங்கள்த்தோடு குறிப்பிட்டுள்ளார்.