டி.என்.பி.எஸ்.சி மீது திமுக அரசுக்கு நம்பிக்கை இல்லையா? அப்புறம் எதற்கு மீண்டும் மீண்டும் நேர்காணல்? அன்புமணி!

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள 2,566 பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடுகள் நடைபெறுகின்றன என்ற ஐயம் எழுந்துள்ளது. 

Does the DMK government not have faith in the TNPSC? Anbumani Ramadoss tvk

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள 2,566 பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் விதத்தை வைத்துப் பார்க்கும் போது, பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதில் முறைகேடுகள் நடைபெறுகின்றனவோ? என்ற ஐயம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மிகவும் வெளிப்படையாக நடைபெற வேண்டிய ஆள்தேர்வு முறை சந்தேக வளையத்தில் மீண்டும், மீண்டும் சிக்கிக் கொள்வது சரியல்ல. இந்த விஷயத்தில் அரசின் அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள பொறியியல் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கான போட்டித் தேர்வுகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் வாயிலாக கடந்த ஆண்டு ஜூன் 29, 30 ஜூலை 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டன.

Latest Videos

அந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அக்டோபர், நவம்பர் மாதங்களிலும், நீதிமன்ற வழக்குகள் காரணமாக துப்புரவு ஆய்வாளர் பணிக்கு மட்டும் கடந்த ஜனவரி மாதத்திலும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல்கள் நடத்தப்பட்டன. வழக்கமாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் முடிவடைந்தவுடன் அனைத்து வகை தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், அண்ணா பல்கலைக்கழகமோ முடிவுகளை அறிவிக்காமல் நேர்காணலில் பங்கேற்கத் தவறியவர்களுக்கு மீண்டும், மீண்டும் வாய்ப்பு அளிப்பதாகக் கூறி, அவர்களை நேர்காணலுக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது. இது தான் தேர்வர்கள் மத்தியில் பெரும் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறைக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியான நாள் முதலாகவே, ஆள்தேர்வு முறையின் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மை குறித்த ஐயம் நிலவிக் கொண்டு தான் இருக்கிறது. முதலில், இந்தப் பணிகளுக்கான தேர்வுகளை இதுவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தான் நடத்தி வந்தது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததுமே, துறை சார்ந்த ஆள்தேர்வுகளை அந்தந்த துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தக்கூடாது என்று அறிவித்ததுடன், அனைத்து ஆள்தேர்வுகளையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவே நடத்தும் வகையில் சட்டத் திருத்தமும் செய்யப்பட்டது.

ஆனால், அதற்கு முற்றிலும் எதிரான வகையில், நகராட்சி நிர்வாகத்துறைக்கு மட்டும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக ஆள்தேர்வு நடத்துவது ஏன்? டி.என்.பி.எஸ்.சி மீது அரசுக்கு நம்பிக்கை இல்லையா? அல்லது அண்ணா பல்கலைக்கழகம் தான் மிக மிக நேர்மையான அமைப்பா? இரண்டாவதாக, நகராட்சி நிர்வாகத்துறைக்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் போட்டித் தேர்வின் மூலம் என்னென்ன பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்களோ, பிற துறைகளில் அதே பணிகளுக்கு தகுதியானவர்களை இன்னும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தான் தேர்ந்தெடுத்து வருகிறது. ஒரே கல்வித்தகுதியும், ஊதியமும் கொண்ட ஊதிய நிலை 20, 13, 11, 5 ஆகியவற்றில் அடங்கிய பணிகளுக்கு தகுதியானவர்களை டி.என்.பி.எஸ்.சி தேர்வு செய்யும் போது நேர்காணல் இல்லை; அதே பணிக்கு தகுதியான ஆட்களை அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு செய்யும்போது நேர்காணல் உண்டு என்பது எவ்வளவு முரண்?

மூன்றாவதாக, அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதில் நடைபெறும் ஊழல்களுக்கு நேர்காணல்கள் தான் முதன்மைக் காரணமாக இருக்கின்றன என்பதால் அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆந்திரத்தில் முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணல்கள் நடத்தப்படுவதில்லை. தமிழ்நாட்டிலும் இரண்டாம் தொகுதி பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்பட்டு விட்டன. ஆனால், அதை விட கீழான பணிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை நகராட்சி நிர்வாகத்துறை தேர்ந்தெடுக்கிறது எனும் போது, முறைகேடுகள் செய்வதற்காகத் தான் நேர்காணல் நடத்தப்படுகிறதோ? என்ற ஐயம் எழுவது இயற்கை.

அதிலும் குறிப்பாக சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்காணலும் முடிவடைந்த பிறகும் இறுதி முடிவுகளை வெளியிடாமல், கடந்த காலங்களில் நேர்காணலுக்கு வராதவர்களை மீண்டும், மீண்டும் நேர்காணலுக்கு வாருங்கள் என அழைக்கும் போது முறைகேடு குறித்த ஐயம் அதிகரிக்கிறது. இதை போக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. எனவே, இது குறித்து விளக்கம் அளிப்பதுடன், ஆள்தேர்வு முடிவுகளையும் நகராட்சி நிர்வாகத்துறையும், அண்ணா பல்கலைக்கழகமும் உடனடியாக வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, ஆள்தேர்வு நடைமுறைகள் அனைத்தும் நேர்மையாக நடந்தன என்பதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு தேர்வரும் எழுத்துத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு? நேர்காணலில் எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு? நேர்காணலில் அவர்களிடம் கேட்கப்பட்ட வினாக்கள், அதற்கு அவர்கள் அளித்த விடைகள், ஒவ்வொரு தேர்வரும் நேர்காணல் செய்யப்படும் காணொலி பதிவு ஆகியவற்றையும் நகராட்சி நிர்வாகத்துறையும், அண்ணா பல்கலைக்கழகமும் வெளியிட வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

vuukle one pixel image
click me!