திருச்சியில் பள்ளியில் வழங்கப்பட்ட சத்துமாத்திரைகளை மொத்தமாக சாப்பிட்ட மாணவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி செம்பட்டு அடுத்த திருவளர்ச்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் காமராஜ். இவரது மகன் வில்பர்ட்(வயது 14). திருச்சி புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிகளில் மாணவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வகையில் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மாணவனுக்கு பள்ளியில் அரசாங்கம் கொடுக்கும் சத்து மாத்திரையை ஆசிரியர்கள் வழங்கியுள்ளனர். ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் 30 மாத்திரைகள் அம்மாணவனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவனோ கடந்த ஒன்றாம் தேதி பள்ளியில் இருக்கும் பொழுது பத்து மாத்திரைகளை சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
undefined
பின்னர் வீடு திரும்பிய அந்த மாணவனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெற்றோர் மகனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று சிகிச்சை பலன் இன்றி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.