12 டீம்கள்..! ஒரே இரவில் 2 எஸ்ஐகள்..! 2 காவலர்கள்..! கைது வேட்டை..! சிபிசிஐடியின் வேகத்திற்கு காரணம் என்ன?

By Selva KathirFirst Published Jul 2, 2020, 10:29 AM IST
Highlights

வழக்கை விசாரணைக்கு ஏற்ற 24 மணி நேரத்திற்குள் குற்றச்சாட்டிற்கு உள்ளான போலீசார் நான்கு பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது வேட்டையாடியுள்ளனர்.

ஜுன் 19ந் தேதி காவல் நிலையத்தில் வைத்து ஜெயராஜ் – பென்னிக்ஸ் மிக கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் ஜூலை 1ந் தேதி இரவு தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த வியாபாரிகள் சங்கமும் தமிழகம் முழுவதும் களம் இறங்கிய நிலையிலும் போலீசார் தொடர்புடைய காவல்துறையினர் மீது வழக்கு கூட பதிவு செய்யாமல் அடாவடியாக இருந்தனர். தமிழக அரசும் கூட உடல் நிலை சரியில்லாமல் ஜெயராஜ் – பென்னிக்ஸ் இறந்துவிட்டனர் என்கிற நிலைப்பாட்டை எடுத்து பதற வைத்தது. எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினி வரை இந்த விவகாரத்தில் குரல் கொடுத்தனர்.


ஆனால் குற்றச்சாட்டுக்கு ஆளான எஸ்ஐகள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும்  போலீசாரை சஸ்பெண்ட் செய்துவிட்டதோடு தனது வேலை முடிந்துவிட்டதாக தமிழக அரசு நினைத்தது. இந்த நிலையில் உயர்நீதிமன்றம் வழக்கை தானாக எடுத்து விசாரித்த போதும் கூட குற்றச்சாட்டுக்கு ஆளான போலீசார் விசாரணைக்கு கூட தமிழக அரசு அழைக்கவில்லை. தூத்துக்குடி மாவட்ட எஸ்பியும் இந்த விவகாரத்தில் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தார். ஆனால் திடீரென கடந்த ஞாயிறன்று வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது தமிழக அரசு.

மறுநாள் மாவட்ட எஸ்பி மாற்றப்பட்டார். இதற்கிடையே வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது. அதுவரை அமைதியாக இருந்த தமிழக அரசு உயர்நீதிமன்ற இந்த உத்தரவிற்கு பிறகு திடீர் வேகம் காட்டியது. விசாரணை அதிகாரியாக அணில் குமார் மட்டுமே உயர்நீதிமன்றம் நியமித்தது. ஆனால் திடீரென சிபிசிஐடி ஐஜி முருகன் தூத்துக்குடி விரைந்தார். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி சாத்தான்குளத்தில் முகாம் அமைத்தார். மேலும் சிபிசிஐடி சார்பில் 12 டீம்கள் களம் இறக்கப்பட்டன.

நேற்று காலையில் விசாரணை தொடங்கிய நிலையில் விசாரணைக்கு வருமாறு குற்றச்சாட்டுக்கு ஆளான எஸ்ஐகள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் காவலர்கள் முத்துராஜ் உள்ளிட்டோரை சிபிசிஐடி போலீசார் வருமாறு கூறினர். ஆனால் ரகு கணேஷ் மட்டுமே விசாரணைக்கு வந்துள்ளார். சிபிசிஐடி ஐஜி முதல் டிஎஸ்பி  அணில் குமார் வரை மாறி மாறி அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். பெரும்பாலான கேள்விகளுக்கு எனக்கு தெரியாது, நான் அப்படி செய்யவில்லை, எஸ்ஐ பாலகிருஷ்ணன் தான், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதார் என மழுப்பலாகவே ரகு கணேஷ் பதில் அளித்துள்ளார்.

இந்த விசாரணையின் அடிப்படையில் யாரும் எதிர்பாராத வகையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் எஸ்ஐ ரகு கணேஷ் கைது செய்யப்பட்டு உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே ரகு கணேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் எஸ்ஐ பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் இருவர் தலைமறைவாகினர். நீதிமன்றத்தில் சரண் அடைந்துவிடலாம் என்று அவர்கள் முடிவெடுத்த நிலையில் வழக்கறிஞர்கள் யாரும் அவர்களுக்கு உடனடியாக கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே மற்ற மூன்று பேரும் இரவுக்குள் கைது செய்யப்பட வேண்டும் என்று சிபிசிஐடி சங்கர் அதிகாரிகளுக்கு கெடு விதித்துள்ளார்.

இதனால் எஸ்ஐ பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் வீடுகளுக்கு நள்ளிரவில் சிபிசிஐடி சென்றுள்ளது. மேலும் அவர்களின் உறவினர்களிடம் பேசி, மூன்று பேரையும் அவர்கள் கூறும் இடத்திற்கு வரவழைத்துள்ளனர். முதலில் இதற்கு தயங்கிய மூன்று பேரையும் தங்கள் பாணியில் கவனித்து வரவழைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது விசாரணையை தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் நான்கு போலீசாரையும் சிபிசிஐடி வேட்டையாடி உள்ளதாகவே கூறலாம். இந்த வழக்கில் கைது நடவடிக்கை இருக்காது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துவது போல் நடத்திவிட்டு போலீசார் அடித்த காரணத்தினால் ஜெயராஜ் பென்னிக்ஸ் இறக்கவில்லை என்று நீதிமன்றத்தில் கூறிவிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் போலீசார் எதுவும் செய்யாத நிலையில் சிபிசிஐடி போலீசார் இந்த அளவிற்குவேகம் காட்டியது ஏன் என்கிற கேள்வி எழுந்தது. மேலும் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதோடு இந்த விவகாரத்தில் இருந்து மேலிடம் ஒதுங்கிக் கொண்டதாக கூறுகிறார்கள். விசாரணை அதிகாரிகளுக்கு இந்த வழக்கில் முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. திடீரென மேலிடம் இப்படி ஒரு முடிவு எடுக்க காரணம் மத்திய உள்துறை அமைச்சகம் தான் என்கிறார்கள். கடந்த வாரம் ஷிகர் தவான் தொடங்கி இந்திய அளவில் பிரபலங்கள் பலரும் ஜெயராஜ் – பென்னிக்சிற்கு நீதி கோரி ட்வீட் செய்தனர்.

இந்த விஷயம் சர்வதேச பிரச்சனையானது. பிபிசி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தின. இதனால் உள்துறை அமைச்சகம் சார்பில் தமிழக அரசிடம் சனிக்கிழமை இரவு விளக்கம் கேட்கப்பட்டது. உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில் அதனை உள்துறை அமைச்சகம் ஏற்கவில்லை என்கிறார்கள். முழு விவரம் மற்றும் இருவரின் பிரேதப்பரிசோதனை அறிக்கையையும் உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது. இதனால் ஏற்பட்ட பதற்றம் காரணமாகவே கைது நடவடிக்கை வரை இந்த விஷயம் சென்றது என்கிறார்கள். மத்திய அரசு தலையிடவில்லை என்றால் போலீசார் நான்கு பேரும் கைது செய்யப்பட்டிருக்கமாட்டார்கள் என்கிறார்கள்.

click me!