பயணத்தில் திடீர் நெஞ்சு வலி..! பள்ளி மாணவிகளை பத்திரமாக காப்பாற்றி உயிர் விட்ட ஆட்டோ ஓட்டுநர்..!

By Manikandan S R SFirst Published Feb 12, 2020, 1:16 PM IST
Highlights

காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த பகுதியில் இருக்கும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்று வந்துள்ளார். பின் மீண்டும் மாலை அவர்களை வீட்டில் விடுவது இவரது வழக்கம். மாணவிகளிடம் மிகவும் அன்பாக பழகியதில் அவர்கள் ராமலிங்கத்தை 'ஆட்டோ மாமா' என பாசத்தோடு அழைத்து வந்துள்ளனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி தொழில் பார்த்து வந்தார். தினமும் பகலில் பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் பயணிகளை ஏற்றி சவாரி செய்யும் இவர் காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த பகுதியில் இருக்கும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்று வந்துள்ளார். பின் மீண்டும் மாலை அவர்களை வீட்டில் விடுவது இவரது வழக்கம். மாணவிகளிடம் மிகவும் அன்பாக பழகியதில் அவர்கள் ராமலிங்கத்தை 'ஆட்டோ மாமா' என பாசத்தோடு அழைத்து வந்துள்ளனர்.

நேற்று மாலையும் வழக்கம் போல மாணவிகளை பள்ளியில் இருந்து வீட்டில் விடுவதற்காக ராமலிங்கம் அழைத்து வந்துள்ளார். அப்போது அவருக்கு லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. ஆட்டோவை ஓட்டிக்கொண்டிருக்கும் போதே நெஞ்சு வலி வந்த நிலையில் சுதாரித்துக்கொண்ட அவர் உடனடியாக ஆட்டோவை நிறுத்தினார். பின் மாணவிகள் அனைவரையும் இறக்கி மற்றொரு ஆட்டோவில் அவர்களை வீட்டிற்கு அனுப்பிவைத்தார்.

பின் தனது ஆட்டோவை எடுத்துக்கொண்டு கிளம்பிய அவருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. வலியில் துடித்த அவர் தனது ஆட்டோவிலேயே மயங்கினார். அதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள்ளாக ராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. ராமலிங்கம் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது ஆட்டோவில் பயணம் செய்யும் குழந்தைகள் கதறி துடித்தனர். தனது உயிர் போகும் நிலையிலும் குழந்தைகளை பத்திரமாக காப்பாற்றிய ராமலிங்கத்தின் செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

'வெறுப்பு அரசியலுக்கு டெல்லி கொடுத்த தண்டனை'..! பாஜகவை தாறுமாறாக விமர்சித்த ஜவாஹிருல்லா..!

click me!