டெல்டா மாவட்டங்களில் கருகும் நெற் பயிர்கள்; விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்தால் திருவாரூரில் பரபரப்பு

By Velmurugan sFirst Published Sep 19, 2023, 1:20 PM IST
Highlights

கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் பெற்றுத்தர வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் திருவாரூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து திருவாரூர் மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு  தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகி வருவதாகவும், தொடர்ந்து சம்பா சாகுபடிக்கும் தண்ணீரில்லாத சூழல் நிலவுவதால் கர்நாடகத்தில் இருந்து உரிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

குறிப்பாக தமிழ்நாட்டில் 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர்கள் கருகி வருவதாகவும் சுமார் 15 லட்சம் ஏக்கர் பரபளவில் சம்பா சாகுபடியை துவங்க தண்ணீர் இல்லாத சூழல் இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை பெற்றுக் கொடுக்க வேண்டும், மேகதாது பகுதியில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவேரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்துடனான செயல்பாட்டை முடக்க வேண்டாம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பணியில் இல்லாத அரசு மருத்துவர்; அஜாக்கிரதையால் பறிபோன ஒன்றரை வயது குழந்தையின் உயிர்

அதன் அடிப்படையில் திருவாரூரில் காவேரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் திருவாரூர் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறையில் இருந்து சென்னை செல்லும் தொடர்வண்டியை மறித்து  50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் தண்டவாளத்தில் படுத்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.

click me!