திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தொடர்ந்து தலைமுறை, தலைமுறையாக ஆண்களே பாரம்பரிய இசைக் கருவியை வாசித்து வந்த நிலையில், முதல் முறையாக பாரம்பரிய இசைக் கருவியை பெண் இசைத்துள்ளார்.
திருவாரூர் தியாகராஜர் கோவில் எந்த வருடம் கட்டப்பட்டது என்பதற்குரிய வரலாறே இல்லாத அளவிற்கு தொன்மையான கோயிலாக கருதப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வதோஷ பரிகாரத் தலமாகவும் தியாகராஜர் கோவில் விளங்கி வருகிறது. இக்கோவிலுக்கு சொந்தமான ஆழித் தேரோட்டம் உலகப் புகழ் பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்றும் இது போற்றப்படுகிறது.
புகழ்பெற்ற இந்த திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சோழர் காலத்தில் பூஜையின் போது வாசிப்பதற்காக பஞ்சமுக வாத்தியம் வாசிக்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த காலத்திலிருந்து திருவாரூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக அந்த பஞ்சமுக வாத்தியத்தை வாசித்து வருகின்றனர். மேலும் சுத்த மத்தளம் என்னும் வாத்தியத்தையும் வாசித்து வருகின்றனர்.
undefined
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தினமும் 6 மணிக்கு நடைபெறும் சாய ரட்சையின் போது இந்த பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.கோவிலில் சாய்ரட்சை என்பது பிரசித்தி பெற்றது. சுத்தமத்தலம் என்பது தியாகராஜர் சாமி அபிஷேகத்தின் போது வாசிக்கப்படுகிறது. இந்த அபிஷேகம் வருடத்திற்கு எட்டு முறை நடைபெறுகிறது. சூர்யஅல்லது சந்திர கிரகணம் நடைபெறும் தினத்தில் அபிஷேகம் நடைபெறும். அதேபோன்று அஜபா நடனத்தில் தியாகராஜர் புறப்பாடு நடைபெறும் போதும் இந்த சுத்த மத்தளம் வாசிக்கப்படுகிறது.
தூத்துக்குடியில் மகள் காதல் திருமணம்; பெற்றோர் எடுத்த விபரீத முடிவால் உறவினர்கள் சோகம்
இந்த பஞ்சமுக வாத்தியத்தை நான்கு தலைமுறைக்கு முன் தம்பியின் என்பவரும் அவரைத் தொடர்ந்து சங்கரமூர்த்தி என்பவர் 82 வயது வரையிலும் அவரைத் தொடர்ந்து செல்வராஜ் என்பவர் 78 வயது வரையிலும் கடந்த 2017 ஆம் ஆண்டு வரை வாசித்துள்ளார்.வயது மூப்பு காரணமாக செல்வராஜ் உயிரிழந்த பிறகு அவருக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தினால் அவருடைய இளைய மகள் சுமதி என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தினந்தோறும் பஞ்சமுக வாத்தியத்தையும் அபிஷேகத்தின் போது சுத்த மத்தளத்தையும் வாசித்து வருகிறார். அவர் கோவிலுக்கு செல்ல முடியாத நேரங்களில் அவருடைய மகள் சுஷ்மா சங்கரி இந்த பஞ்சமுக வாத்தியத்தை வாசிக்கிறார்.
இதுகுறித்து சுமதி கூறுகையில் இந்த பஞ்சமுக வாத்தியத்தை வாசிப்பதை பிறவி பயனாகவும் பெரும் பாக்கியமாகவும் கருதுகிறேன்.எனது தலைமுறையில் முதல் முறையாக பெண்ணாக நான் வாசிப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.எத்தனை வேலைகள் இருந்தாலும் சரியாக 5 மணிக்கு கோவிலுக்கு சென்று ஆறு மணிக்கு இந்த வாத்தியத்தை வாசிக்கிறேன்.சாய ரட்சையின் போது பஞ்சமுக வாத்தியம் வாசிப்பது என்பது நமது மூலாதாரத்தை தூண்டுகின்ற ஒரு இசையாக பார்க்கப்படுகிறது.எனது அப்பாவிற்கு பிறகு நான் இதை வாசித்து வருகிறேன்.எனக்கு கோவில் நிர்வாகத்திலும் பொதுமக்கள் சார்பிலும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.இது தனக்கு சொல்ல முடியாத பேரானந்தத்தை தருகிறது என்று கூறினார்.
மதுரையில் இருந்து சென்னைக்கு பறந்த இதயம்; 2 மணி நேர திக் திக் பயணம்
சுமதி திருவாரூரில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிகிறார். தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் நல்லாசிரியர் விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அவரது கணவர் மதியழகன் மாவட்ட கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார்.தினமும் சுமதி தனது தாய் மங்கையர்க்கரசியிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு இந்த பஞ்சமுக வாத்தியத்தை வாசிக்க செல்கிறார். முதல் தலைமுறை பெண்ணாக கடந்த ஐந்து வருடங்களாக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பாரம்பரிய வாத்தியமான பஞ்சமுக வாத்தியத்தை பெண் ஒருவர் வாசிப்பது கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினால் மிகையாகாது.