திருவாரூரில் ஓர் உலக அதிசயம்; தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய அன்பு மகன்

Published : Jun 10, 2023, 09:08 AM IST
திருவாரூரில் ஓர் உலக அதிசயம்; தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய அன்பு மகன்

சுருக்கம்

திருவாரூரில் உயிரிழந்த தாய்க்காக ரூ.5 கோடி மதிப்பில் தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லம் கட்டிய மகனின் நெகிழ வைக்கும் செயல்.

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை பூர்விகமாகக் கொண்ட அப்துல் காதர், ஜெய்லானி பீவி தம்பதியினருக்கு நான்கு மகள் ஒரு மகன். அப்துல் காதர் சென்னையில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது மகன் அம்ருதீன் ஷேக் தாவூதிற்கு பதினொரு வயது இருக்கும் பொழுது அவரது தந்தை உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ஜெய்லானி பீவி அந்த கடையை நிர்வகித்து வந்ததுடன் தனது மகன், மகள்கள் ஆகியோரை நன்கு படிக்க வைத்து கரை சேர்த்துள்ளார்.

இதில் அம்ருதீன் ஷேக் தாவுது பி.ஏ முடித்துவிட்டு தற்போது சென்னையில் தொழிலதிபராக இருந்து வருகிறார். சிறுவயது முதல் தன்னை தனது அம்மா அரும்பாடு பட்டு வளர்த்து ஆளாக்கிய காரணத்தினால் அம்ருதீன் தனது அன்னையின் வழிகாட்டுதலின்படியும், அவரிடம் அனுமதி பெற்றே எந்த ஒரு காரியத்தையும் அவர் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு தனது 72 வயதில் ஜெய்லானி பீவி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

தாய் உயிரிழந்த நாள் முதல் அம்ருதீன் தாயின் நினைவலைகளால் தத்தளித்து வந்த நிலையில் இறந்த தனது தாய்க்கு நினைவு இல்லத்தை கட்ட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். அதன் அடிப்படையில் திருச்சியில் உள்ள கட்டிட வடிவமைப்பாளர் ஒருவரை தொடர்பு கொண்டு அம்மாவிற்கான நினைவுச் சின்னத்தை தாஜ்மஹால் வடிவில் கட்டலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்கள், தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு இங்கு உள்ள தொழிலாளர்களுடன் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் தாஜ்மஹால் வடிவில் இந்த நினைவு இல்லத்தை அரும்பாடுபட்டு கட்டியுள்ளனர். இந்த தாஜ்மஹால் வடிவ நினைவு இல்லத்தின் உள்ளே ஜெய்லானி பீவி அம்மையாரின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவு இல்லத்தின் திறப்பு விழா கடந்த ஜூன் இரண்டாம் தேதி செய்யப்பட்டு பொது மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு இல்லத்தை எம் மதத்தினரும் வந்து பார்த்துவிட்டு செல்லலாம். ஐந்து வேளை தொழுகை நடத்துபவர்கள் இங்கு தொழுகை நடத்திக் கொள்ளலாம். அதேபோன்று மதரஸா பள்ளியும் இங்கே இயங்கி வருகிறது. இதில் தற்போது பத்து மாணவ, மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

கொலை குற்றவாளியை சயின்டிஸ்டாக மாற்றிய கோவை மத்திய சிறை; சிறையில் உருவான இ சைக்கிள்

மேலும் ஜெய்லானி பீவி அமாவாசைக்கு அடுத்த நாள் உயிரிழந்ததால் அமாவாசை தோறும் ஆயிரம் நபர்களுக்கு அம்ருதீன் ஷேக் தாவூது தனது கையால் பிரியாணி சமைத்து அன்னதானம் வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து அமாவாசைக்கு முதல் நாளே அம்மையப்பன் வந்து தனது கையால் பிரியாணி தயார் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார். இறந்த தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகனின் செயல் இப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

இந்த தாஜ்மஹால் வடிவ நினைவு இல்லத்தை நூற்றுக் கணக்கான பொதுமக்கள் வந்து தினந்தோறும் பார்த்து செல்கின்றனர். தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் உலக அதிசயத்தில் ஒன்றாக இடம்பிடித்தாலும் தனது  தாய்க்காக மகன் கட்டிய தாஜ்மஹால் உலகின் எட்டாவது அதிசயம் என்று சொன்னால் அது மிகையாகாது.

PREV
click me!

Recommended Stories

மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகையுடன் UPSC , TNPSC படிக்க இலவச பயிற்சி : தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி?
திருவாரூர் மாவட்ட சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு: 163 பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கவும்…