திருவண்ணாமலையில் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருக்கலைப்பில் ஈடுபட்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த ஆனந்தி மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருக்கலைப்பில் ஈடுபட்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த ஆனந்தி மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில், புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வீட்டில், சட்டவிரோத கருக்கலைப்பு நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மருத்துவக் கண்காணிப்பு குழுவினர் கடந்த டிசம்பர் மாதம் 1-ம் தேதி நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
undefined
இதனையடுத்து போலி பெண் டாக்டர் ஆனந்தி (51), அவரது கணவர் தமிழ்ச்செல்வன் (52), ஆட்டோ டிரைவர் சிவக்குமார் (48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனந்தியின் சட்ட விரோத கருக்கலைப்பு மையம் செயல்பட்ட வீடு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது. விசாரணையில், பிளஸ் 2 தேர்ச்சி பெறாத ஆனந்தி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ததும் தெரியவந்தது. பின்னர் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் அவர் வெளியே வந்தார். ஆனால், அவரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். கடந்த அக்டோபர் மாதம் திருவண்ணாமலையில் செங்குட்டுவன் தெருவில் உள்ள அவரது வீட்டில் ஆனந்தி மீண்டும் சட்ட விரோதமாக கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறிந்து தெரிவிப்பது, வெளி மாவட்டங்களுக்கு சென்று கருக்கலைப்பில் ஈடுபடுவதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து, செங்குட்டுவன் தெருவில் உள்ள ஆனந்தி வீட்டடில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சட்ட விரோதமாக கையடக்கமான நவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்கேன் கருவியை பறிமுதல் செய்தனர். பின்னர், ஆனந்தியையும் அவருக்கு உடந்தையாக இருந்த திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நவீன்குமார் (20) என்பவரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் ஆனந்தி, அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளர் நவீன்குமார் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் 2-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.