மயானம் செல்வதற்கு முறையான சாலை வசதிகள் இல்லாததால் இறந்து போனவர்களின் உடல்களை கரடுமுரடான பாதையிலும், மதகு தண்ணீர் செல்லும் கால்வாயிலும், வயலில் நெற்பயிர்களில் இறங்கியும் சுமந்து செல்வதாக வேதனையோடு கூறுகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே இருக்கிறது மருத்துவாம்பாடி கிராமம். இங்கு இருக்கும் காலனி பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரைச் சேர்ந்த சக்குபாய் என்கிற மூதாட்டி கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த நிலையில் மரணமடைந்திருக்கிறார். இதையடுத்து உறவினர்கள் அவருக்கு இறுதிச்சடங்குகள் செய்துள்ளனர். பின்னர் அவரை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
undefined
மயானத்திற்கு செல்வதற்கு முறையான சாலை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மூதாட்டியின் சடலத்தை விவசாய நெல்வயலில் இறங்கி சேற்றின் வழியாக கொண்டுசென்றுள்ளனர். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து அந்த ஊர் மக்கள் கூறும் போது, கடந்த 50 ஆண்டுகளாக இந்த அவல நிலை தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.
மயானம் செல்வதற்கு முறையான சாலை வசதிகள் இல்லாததால் இறந்து போனவர்களின் உடல்களை கரடுமுரடான பாதையிலும், மதகு தண்ணீர் செல்லும் கால்வாயிலும், வயலில் நெற்பயிர்களில் இறங்கியும் சுமந்து செல்வதாக வேதனையோடு கூறுகின்றனர்.
மயான பாதை அமைத்து தரக்கோரி பலமுறை அரசாங்கத்திற்கு மனு கொடுத்தும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். இனிமேலாவது மாவட்ட நிர்வாகம் உடனடியாக மயான பாதை அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.