
திருப்பூர் பல்லடம் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தென்னபாளையம் குடியிருப்பு பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள காலி இடத்தில் இளம் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பூர் தெற்கு போலீசார் தலை மற்றும் கை நசுங்கிய நிலையிர் கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போது பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஏதாவது துப்பு கிடைக்குமா என்பது தொடர்பாக சோதனை மேற்கொண்டனர். அப்போது பெண்ணின் சடலத்தின் அருகே ரத்த கரையுடன் கல் ஒன்று கிடந்தது. இதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டது தனியார் மருத்துவமனை செவிலியர் என்பது தெரியவந்தது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர் யார் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.