திருமணம் முடிந்து 8 மாதங்களே ஆன நிலையில் புதுமண காதல் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் முடிந்து 8 மாதங்களே ஆன நிலையில் புதுமண காதல் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணர் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். கோவிலில் பூசாரி. இவரது மகன் அஜீத்குமார் (21). அங்குள்ள ஒரு நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே நூற்பாலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச்சேர்ந்த முத்துலட்சுமி (21) ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அப்போது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் கடந்த மார்ச் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் பழனியில் திருமணம் செய்து கொண்டனர்.
அதன்பின்னர் அஜீத்குமார், முத்துலட்சுமி ஆகிய இருவரும் பூலாங்கிணரில் அஜீத்குமாரின் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் ஹரிகிருஷ்ணனுக்கு சிறுநீரகத்தில் கல் இருந்ததாகவும், அதனால் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல திருமணமாகி 7 மாதமாகியும் குழந்தை இல்லையே என்றும் இருவரும் கவலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பகுதியில் உள்ள அறையில் அஜீத்குமார் தனது மனைவியுடன் தூங்கிக்கொண்டிருந்தார். மற்றொரு அறையில் ஹரிகிருஷ்ணன், தனது மனைவி புஷ்பலதாவுடன் படுத்து தூங்கினார். ஹரிகிருஷ்ணன் நேற்று அதிகாலை எழுந்து பின்பக்கம் சென்று குளித்துவிட்டு காலை 5 மணியளவில் கோவிலுக்கு புறப்பட்டார். அதற்காக துண்டு எடுப்பதற்காக முன்பக்கமுள்ள அறைக்கு சென்று மின்விளக்கை போட்டுள்ளார். அப்போது அஜீத்குமார், முத்துலட்சுமி ஆகிய 2 பேரும் ஆளுக்கு ஒரு துப்பட்டாவில் தூக்குப்போட்டு சடலமாக தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஹரிகிருஷ்ணன் உடுமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவருரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2 பேரும் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.