லாக்டவுனை பயன்படுத்தி பாலை அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்ததோடு, மாவட்டம் தோறும் ஆய்வு நடத்தியும் வருகிறார்.
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஒருவாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் மளிகை பொருட்கள், காய்கறி, பழங்கள், பால் ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென அதிகாரிகள், அமைச்சர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முழு ஊரடங்கிலும் பொதுமக்களுக்கு எவ்வித தங்கு தடையுமின்றி பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்க ஆவின் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடமாடும் விற்பனை வாகனம் மற்றும் தற்காலிக விற்பனை மையம் அமைத்துப் பொதுமக்கள் அனைவருக்கும் தங்கு தடையின்றி பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி லாக்டவுனை பயன்படுத்தி பாலை அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்ததோடு, மாவட்டம் தோறும் ஆய்வு நடத்தியும் வருகிறார்.
திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், சங்கரண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஆவின் கொள்முதல் நிலையங்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நாசர், தமிழக அரசின் புதிய விலைக்கு விற்கப்படாத 11 பால் விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பாலை உரிய விலைக்கு விற்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.