ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் பற்றி வெளியான அறிக்கை குறித்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை விளக்கமளித்துள்ளது
இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், ஆயுத பூஜை தொடர்பாக, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அனுப்பியதாக சுற்றறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில், “எதிர்வரும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடும் நிகழ்வில் எந்த மதத்தையும் சேர்ந்த சாமி படங்களோ, சிலைகளோ பயன்படுத்தக்கூடாது. மேலும் அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனை வார்டு பிரிவுகளில் ஏதேனும் சாமி படம், சிலைகள் இருப்பின், எதிர்கால பிரச்சினைகளைத் தவிர்க்கும் பொருட்டு உடனடியாக அகற்றி விட அறிவுறுத்தப்படுகிறது.”என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து மத நம்பிக்கைகளை அரசு புண்படுத்துவதாக கண்டனக் குரல்கல் எழுந்தன. இந்த நிலையில், ஆயுத பூஜைக்கு மதம் சார்ந்த படம் சிலையைப் பயன்படுத்தக் கூடாது என்று வெளியான சுற்றறிக்கை உண்மையானது அல்ல என்று திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் எந்தவிதமான சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை. தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. இது உண்மைக்கு புறம்பானது.” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அரசு இயந்திரமா, திமுகவின் செய்தி தொடர்பு நிறுவனமா? அண்ணாமலை சரமாரி கேள்வி!