புதிதாக பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தின் நிலை மோசமாக உள்ளது என்று அம்மாவட்ட மக்கள் கூறுகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து நகராட்சியில் கடையநல்லூரில் மட்டுமே கமிஷனர் உள்ளார்.
புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்தில் நான்கு நகராட்சிகளில் ஆணையர்கள் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பாதிதான் முடிந்துள்ளது. அதிலும், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஊராட்சித் தேர்தல் நடைபெறவில்லை. நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் எப்போது தேர்தல் நடைபெறும் என்று தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் பல மாநகராட்சிகளில் ஆணையர்களே இல்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக புதிதாக பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தின் நிலை மோசமாக உள்ளது என்று அம்மாவட்ட மக்கள் கூறுகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து நகராட்சியில் கடையநல்லூரில் மட்டுமே கமிஷனர் உள்ளார். செங்கோட்டை, தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய நான்கு நகராட்சிகளில் பொறியாளர்களே நகராட்சி ஆணையர் பணியைக் கூடுதலாக கவனித்து வருகின்றனர். இதனால், மக்களுக்கான அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன. நகராட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், கூடுதல் பொறுப்பு நகராட்சி ஆணையர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்த நகராட்சி ஆணையரோ பணியில் இல்லை என்றால் மக்கள் பிரச்னைகளை யார் தீர்ப்பார்கள்? பொறியாளர் அவருடைய பணியை பார்ப்பாரா? நகராட்சி நிர்வாகத்தைக் கவனிப்பாரா? மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பாரா..? இவை எல்லாம் அறிந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.