வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் காரணத்தால் அடுத்த இரண்டு தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் வெயிலின் வெப்பத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். வெயில் கடுமையாக இருந்த போதும் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் உருவாகியிருந்த ஆம்பன் புயல் காரணமாகவும் அவ்வபோது மழை பெய்து வந்தது.
undefined
இந்த நிலையில் அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கடும்வெப்பம் பதிவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நெல்லை மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக் கூடும். வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் காரணத்தால் அடுத்த இரண்டு தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை வானம் தெளிவாகக் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக் கூடும். தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு இப்பகுதிக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 7 சென்டி மீட்டர் அளவில் மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு வானிலை மையம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.