ராஜினாமா செய்யவில்லை - நெல்லை மேயர் சரவணன் மறுப்பு!

By Manikanda PrabuFirst Published Aug 31, 2023, 6:04 PM IST
Highlights

நெல்லை மாநகராட்சி மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வெளியான தகவலுக்கு மேயர் சரவணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
 

நெல்லை மாநகராட்சி மேயராக திமுகவின் சரவணன் உள்ளார். கடந்த சில தினங்களாக நெல்லை மேயருக்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வந்தது. இதையடுத்து, மேயர் சரவணனை மாற்றக் கோரி, கடந்த ஜனவரி, மார்ச் ஆகிய மாதங்களில் இரண்டு முறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து துணை மேயர் கே.ஆர்.ராஜு தலைமையிலான நெல்லை திமுக கவுன்சிலர்கள் 30க்கும் மேற்பட்டோர் வலியுறுத்தியிருந்தனர்.

மேலும், மேயர் சரவணனனை மாற்றக்கோரி மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அண்மையில் கடிதம் அனுப்பினர். அதில், மேயர் சரவணன் மீது ஊழல், கமிஷன் உள்ளிட்ட புகார்கள் கூறப்பட்டிருந்தன. மேலும், மேயர் சரவணன் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், கவுன்சிலர்களின் வார்டு பிரச்சினையை தீர்ப்பதில் கவனம் செலுத்த மறுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதனிடையே, நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. சொந்தக் கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக கட்சித் தலைமைக்கு மேயர் சரவணன் கடிதம் அளித்துள்ளதாகவும், ஸ்டாலின் மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியதும் சரவணனின் ராஜினாமா தொடர்பாக முடிவெடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா? பின்னணி என்ன?

இந்த நிலையில், நெல்லை மாநகராட்சி மேயர் பதவியை ராஜினாமா செய்ததாக வெளியான தகவலுக்கு மேயர் சரவணன் மறுப்பு தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயம் சென்றது உண்மை. ஆனால், ராஜினாமா கடிதம் அளிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ள அவர், நெல்லை பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெறவுள்ள கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தாம் பங்கேற்கவுள்ளதாகவும் விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

click me!