
Student Refused To Eeceive Her degree from TN Governor R.N. Ravi: திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக வேந்தராக மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் ஆளுநர் ரவியிடம் பட்டம் பெற்று மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த நாகர்கோவில் மாணவி
அப்போது மேடைக்கு வந்த நாகர்கோவிலைச் சேர்ந்த ஷீன் ஜோசப் என்ற மாணவி, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மறுத்து, அருகில் நின்ற பல்கலைக்கழக துணை வேந்தரிடம் பட்டத்தை பெற்றுச் சென்றார். ஆளுநர் ரவி சைகை காட்டியும் அந்த மாணவி அதை சட்டை செய்யாமல் துணைவேந்தரிடம் பட்டத்தை வாங்கிச் சென்றார். இதைப்பார்த்த ஆளுநர் ரவி மேடையிலேயே அதிர்ச்சி அடைந்தார். அவர் மட்டுமின்றி மேடையில் இருந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் பட்டம் பெற வந்த மாணவ, மாணவிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆளுநரை புறக்கணித்தது ஏன்?
இதனைத் தொடர்ந்து ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி ஷீன் ஜோசப் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஆளுநர் ஆர்.என். ரவி தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் செய்தது என்ன? அவர் தமிழகத்தும், தமிழக மக்களுக்கும் எதிராக செயல்பட்டு வருவதால் அவரிடம் இருந்து பட்டம் பெற எனக்கு விருப்பம் இல்லை. இது என்னுடைய தனிப்பட்ட முடிவு'' என்றார்.
தமிழக அரசு-ஆர்.என்.ரவி மோதல்
தமிழ்நாடு அரசும், ஆளுநர் ஆர்.என்.ரவியும் தொடர்ந்து கீரியும், பாம்புமாக இருந்து வருகின்றனர். தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதிப்பது, அரசின் கொள்கைகளுக்கு மாறான கருத்துக்களைத் தெரிவிப்பது போன்ற விஷயங்களில் ஆளுநர் செயல்படுவதாக தமிழக அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. தமிழக அரசு அனுப்பிய முக்கிய மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் கொடுக்காமல் இருந்ததால் தமிழக அரசு இதற்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றது. அப்போது உச்சநீதிமன்றம் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.