நெல்லையில் கை, கால்கள் செயல் இழந்த நிலையிலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 420 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், மீனாட்சிபுரம் புளியந்தோப்பு நடுத்தெருவைச் சேர்ந்த சசிகுமார் - பாப்பம்மாள் தம்பதியின் மகன் தமிழ்செல்வம். தந்தை சசிகுமார் தனியார் பேக்கரி கடை ஊழியராக பணி செய்து வருகிறார். மாணவர் தமிழ்செல்வம் பிறவி முதலே கை, கால்கள் செயல் இழந்து நடக்க முடியாத மாற்றுதிறனாளி ஆவார். ஆனால் தனது தன்னம்பிக்கையின் காரணமாக மனம் தளராது 6- ம் வகுப்பு முதல் நெல்லை சந்திப்பில் உள்ள மதிதா இந்து பள்ளியில் பயின்று வருகிறார்.
SSLC Exam Result: தமிழ் தவிர்த்து அனைத்து பாடங்களிலும் சதம் விளாசிய மாணவிகளுக்கு குவியும் பாராட்டு
பெற்றோரின் உதவியுடன் பள்ளி சென்று வரும் நிலையில் இந்த ஆண்டு 10 வகுப்பு பொதுத் தேர்வு உதவியாளர் வைத்து எழுதியிருந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் மாணவர் தமிழ்செல்வம் தனது கடின முயற்சியால் 420 மதிப்பெண்கள் எடுத்து சாதனை நிகழ்த்தியுள்ளார். தமிழ் பாடத்தில் 88 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 76 மதிப்பெண்களும், கணிதப் பாடத்தில் 88 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 83 மதிப்பெண்களும், சமூக அறிவியலில் 85 மதிப்பெண்களும் எடுத்துள்ளார்.
இதுகுறித்து மாணவர் கூறுகையில், கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும். முதலில் 420 மதிப்பெண்கள் கிடைக்க காரணமாக இருந்த எனது பெற்றோர்கள், ஆசிரியர்கள் எனது நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேல்நிலைக் கல்வியில் வரலாற்று பாடப்பிரிவு எடுத்து படிக்க உள்ளேன். எனது எதிர்கால லட்சியம் சட்டம் படித்து சிறந்த வழக்கறிஞராக வேண்டும் என்பதுதான் என தெரிவித்தார்.