சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது பிற மாவட்டங்களிலும் அதிகரித்துள்ளது
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 2,342 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,84,094 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 1,463 பேருடன் சேர்த்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,56,548 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16 பேர் தமிழகத்தில் கொரோனா உயிரிழந்துள்ளனர் . இதனால் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,700 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது பிற மாவட்டங்களிலும் அதிகரித்துள்ளது. நெல்லையில் கொரோனா பரவல் காரணமாக ஆர்.டி.ஓ.அலுவலகம் மூடப்பட்டச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மண்டல வட்டார போக்குவரத்து அலுவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த அலுவகத்தை ஒரு வாரத்திற்கு மூடிவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கராக பணிபுரிந்து வருபவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நெல்லைஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் பணிபுரிந்து வந்த ஆர்.டி.ஓ. அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து, ஒரு வாரத்திற்கு மூடி வைக்க மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றி வரும் 60க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த ஊழியரோடு தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ளும் முயற்சிகளிலும் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.