சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் அந்த மருத்துவமனையில் அதிக பணம் வாங்குவதாகவும் தனக்கு 2 லட்சம் வரையில் செலவாகியிருப்பதாக முருகன் கூறியிருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் முருகனுக்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலமாக வெறும் 8 ஆயிரம் ரூபாய் செலவில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்தவர் முருகன்(34). கூலித்தொழிலாளியாக அந்த பகுதியில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். கடந்த ஆண்டு நடந்த ஒரு விபத்தில் முதுகு தண்டில் பலத்த காயமடைந்த முருகன், வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். அவரது மேல்சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்பட்டுள்ளது. ஏழ்மை நிலையில் இருக்கும் அவரால் பெரிய அளவில் பணம் திரட்ட முடியாமல் இருந்திருக்கிறது.
இதனால் சமூக ஊடகங்களான வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் வழியாக தனது ஏழ்மை நிலையை வீடியோவாக பதிவிட்டு உதவி கேட்டுள்ளார். அதைப்பார்த்து பலர் அவரது வங்கி எண்ணிற்கு பணம் அனுப்பி இருக்கின்றனர். சுமார் 2 லட்சம் அளவில் பணம் சேர்ந்துள்ளது. அதை தனது நண்பரான பெனட் என்பவரிடம் கூறி சிகிச்சைக்கு உதவும்படி கூறியிருக்கிறார். அவரும் குமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் முருகனை சிகிச்சைக்கு அனுமதித்து இருக்கிறார். பின்னர் அவ்வப்போது முருகனிடம் சிகிச்சைக்கான மருத்துவமனை ரசீதுகளை காட்டி பெனட் பணம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய முருகன் சில நாட்களுக்கு பிறகு மீண்டும் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் அந்த மருத்துவமனையில் அதிக பணம் வாங்குவதாகவும் தனக்கு 2 லட்சம் வரையில் செலவாகியிருப்பதாக கூறியிருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் முருகனுக்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலமாக வெறும் 8 ஆயிரம் ரூபாய் செலவில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
இதனால் குழம்பி போன முருகன், மருத்துவமனை ரசீதுகள் என்று பெனட் கொடுத்தவற்றை காட்டியிருக்கிறார். அப்போது தான் அவையனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டவை என்று தெரிந்தது. முருகனை ஏமாற்றி பெனட் பணம் பறித்திருக்கிறார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பாகவும் முருகன் சார்பாகவும் ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள், தலைமறைவாகியிருக்கும் பெனட்டை தீவிரமாக தேடி வருகின்றனர்.