3 ஆண்டுகளுக்கு பின் நிரம்பி வழியும் காரையாறு அணை..! முழு கொள்ளளவை எட்டியது..!

By Manikandan S R SFirst Published Nov 28, 2019, 1:11 PM IST
Highlights

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாநிலத்தின் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இது மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இருக்கும் பாபநாசம் மலைப்பகுதியில் அமைந்துள்ளது கரையாறு நீர்த்தேக்கம். 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று காலையில் அணையின் நீர்மட்டம் 142.35 ஆக இருந்தது. இந்த நிலையில் அணை தற்போது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. கடந்த 2016 ம் ஆண்டு நிரம்பிய காரையாறு அணை, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் நிரம்பியுள்ளது.

அணைக்கு நீர்வரத்து 1946.11 ஆக இருக்கிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1396 அடி கன அடியாக உள்ளது. இதே போல மாவட்டத்தின் மற்றொரு பிரதான அணையான சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 150 ஆக இருக்கிறது. முழு கொள்ளளவான 156 அடியை சேர்வலாறு அணை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 77 அடியாக இருக்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கு பின் காரையாறு அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

click me!