வடகிழக்கு பருவமழையையொட்டி, பெய்து வரும் தொடர் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதன் காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
மேலும் படிக்க:வெளுத்து வாங்கும் மழை.. கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. கும்பக்கரை அருவில் குளிக்க தடை..
இதனால் முக்கிய அணைகளில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும் ஆறு மற்றும் ஏரிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சென்னயில் முக்கிய நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:தமிழகம் முழுவதும் கொட்டிதீர்க்கும் மழை.. சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்பரித்துக் கொட்டுகிறது. இதனையடுத்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வந்திருந்த மக்கள் ஆர்பரித்து கொட்டும் தண்ணீரை பார்த்த படி, திரும்பி செல்கின்றனர்.