மழை நின்றும் வடியாத வெள்ளம்... நெல்லை, தூத்துக்குடியில் நாளையும் விடுமுறை அறிவிப்பு

By SG BalanFirst Published Dec 20, 2023, 4:41 PM IST
Highlights

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளம் இன்னும் வடியாத சூழலில், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளம் இன்னும் வடியாத சூழலில், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் வடியத் தொடங்கியிருக்கிறது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய தாமிரபரணி ஆற்றின் நீர்மட்டம் குறைய ஆரம்பித்துள்ளது.

இச்சூழலில், பல பகுதிகளில் வெள்ளம் இன்னும் வடியாத சூழல் நிலவுவதால், நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளையும் (டிசம்பர் 21) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்கான நிதியை விரைவில் விடுவிக்க வலியுறுத்தி இருக்கிறார். நிவாரணத் தொகையாக ரூ.7033 கோடியும் நிரந்தரத் தீர்வுக்காக ரூ.12,659 கோடியும் வழங்குமாறு பிரதமர் மோடியிடம் கோரியுள்ளார். தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.2000 நிதியை உடனடியாக விடுவிக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

click me!