திருமண விழாவில் பங்கேற்ற 45 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதி முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
திருமண விழாவில் பங்கேற்ற 45 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதி முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை மிகவேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. ஆனால், இதுவரை நகர்புறங்களில் இருந்த பாதிப்பு கிராமங்களில் அதிகரித்து வருகிறது.
இநநிலையில், நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கேசவநேரி கிராமத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு 50 பேர் தான் அனுமதி என்பதால், காலையில் இருந்து மாலை வரை ஐம்பது, ஐம்பது பேராக ஏராளமானோர் வந்து சென்றனர். அதன்பிறகு சில நாட்களில் அந்த பகுதியில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. ஒன்றன் பின் ஒன்றாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதில் மணமகன் உள்பட சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 45 பேர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பெற்று வந்த கேசவநேரி கிராமத்தில் மட்டும் 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டனர். கேசவநேரி கிராமத்தை கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து ஊருக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டது. மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.