ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் துரை(36). இவரது மனைவி இந்திரா. இந்த தம்பதியினருக்கு சுதன்(12), ரோஹித்(7) என இருமகன்கள் உள்ளனர். துரை சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்து ஓட்டி வருகிறார். இவரது மகன்கள் இருவரும் வள்ளியூரில் இருக்கும் ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளனர். இந்தநிலையில் விடுமுறை முடிந்து மகன்களை விடுதியில் விடுவதற்காக துரை தனது மனைவியுடன் சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை துரையும், இந்திராவும் பள்ளி விடுதியில் மகன்களை விடுவதற்காக தங்களது ஆம்புலன்ஸில் அழைத்து சென்றுள்ளனர். இருவரையும் அங்கு விட்டுவிட்டு மீண்டும் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வந்த போது வாகனத்தின் விளக்கு எரியாமல் இருந்துள்ளது. இதனால் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி துரை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஆம்னி பேருந்து ஒன்று அதி வேகத்தில் வந்துள்ளது.
எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற ஆம்புலன்ஸ் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிய ஆம்னி பேருந்து, நிறக்காமல் சென்றுள்ளது. இதில் பலத்த காயமடைந்த துரை சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார். லேசான காயங்களுடன் இந்திரா உயிர் தப்பியுள்ளார். தன் கண்முன்னே கணவர் பலியாகிக்கிடப்பது கண்டு இந்திரா கதறி துடித்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் பலியான துரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் நாங்குநேரி காவல்துறையினர் நிற்காமல் சென்ற ஆம்னி பேருந்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.