
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் - திருநெல்வேலி பிரதான சாலையில் உள்ள பிரபலமான அசைவ உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் கிரேவியை ஆர்டர் செய்து பார்சலாக வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். சக நண்பர்களுடன் அமர்ந்து சிக்கன் கிரேவியை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சிக்கன் கிரேவியில் இறந்து கிடந்த பல்லியை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அந்த பிரபலமான அசைவ உணவகத்திற்கு தொடர்பு கொண்டு சிக்கன் கிரேவியில் பல்லி இறந்து கிடப்பது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். அப்போது தங்களது உணவகத்தில் அது போன்று எதுவும் கிடையாது என உணவகம் தரப்பு கூற மனம் வேதனை அடைந்த வாடிக்கையாளர் விழிப்புணர்வுக்காக சிக்கன் கிரேவியில் பல்லி இறந்து கிடந்ததை புகைப்படமாக எடுத்து புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பரவ விட்டார்.
“ஆத்தா மகமாயி” சிஎஸ்கே வெற்றிக்காக கடைசி நிமிடம் வரை கடவுளிடம் போராடிய ரசிகர்
இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவத் தொடங்கியது. இதனை கண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சுதாரித்துக் கொண்டு உடனடியாக அந்த கடை குறித்து விசாரித்து கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மதிய வேளை என்பதால் அந்த அசைவ உணவு கடையில் திரளானவர்கள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இருந்த போதும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி அந்த அசைவ கடைக்குள் நுழைந்து அங்கிருந்த சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, சால்னா உள்ளிட்டவைகளை முகர்ந்து பார்த்தும், ருசித்துப் பார்த்தும் அவருக்கே உரித்தான ரீதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்பு கடையின் மேல் தளத்திற்கு சென்ற அவர் அங்கு பிரீஸரில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சிக்கன் குறித்து கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அங்கிருந்த பிரிட்ஜை திறந்து பார்த்தபோது அது முழுவதும் சுத்தம் செய்யப்படாமல் அழுகடைந்து இருந்ததால் இது குறித்து கடைக்காரரிடம் கேள்வி எழுப்பினார். இதுபோன்று இனி நடக்காது என கடை உரிமையாளர் கெஞ்சி கூறியதால் சமாதானம் அடைந்த உணவுப் பாதுகாப்பு அதிகாரி அடுத்ததாக கேரி பேக் பைகள் இருப்பது குறித்து கேள்வி எழுப்பி அவற்றை பறிமுதல் செய்து அதற்காக மட்டும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.