தேனியில் ஒரே தெருவை சேர்ந்த 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனியில் ஒரே தெருவை சேர்ந்த 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், துக்க நிகழ்வுக்கு, பாலன் தெருவைச் சேர்ந்த சிலர், ஷேர் ஆட்டோவில் பயணித்து துக்க நிகழ்வை முடித்துக்கொண்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். அடுத்த சில நாள்களில் அதில் ஒருவருக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்படவே, மருத்துவமனைக்குச் சென்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டுள்ளார். அப்போது, அந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவரிடம் சுகாதாரத்துறையினர் நடத்திய விசாரணையில், துக்க நிகழ்வுக்குச் சென்றது குறித்தும், தன்னுடன் 10 பேர் ஒரே ஆட்டோவில் பயணித்த விவரத்தையும் கூறியுள்ளார்.
அந்தத் தகவலை சேகரித்த சுகாதாரத்துறையினர், அந்த நபருடன் ஆட்டோவில் பயணம் செய்த நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய, அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவர்களின் குடும்பத்தார், பக்கத்துவீட்டில் வசிப்பவர்கள் என ஒரே தெருவில் 46 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, வீடுகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சாலைகளில் குளோரின் பவுடர் தெளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தேனி நகர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை தேனி மாவட்டத்தில் மேலும் 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,470ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து 2255 பேர் குணமடைந்துள்ள நிலையில், 80 பேர் உயிரிழந்துள்ளனர்.