ஜெயலலிதா இருந்திருந்தால், ஓ. பன்னீர்செல்வம் மகனுக்கு தேர்தலில் போட்டியிட சீட்டு கிடைத்திருக்குமா என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். பெரியகுளத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் பேசியதாவது:
தேனியில் போட்டியிடக்கூடிய இளங்கோவன் எதையும் போராடி, வாதாடி வாங்கித் தரக்கூடிய ஆற்றல் உள்ளவர். மத்தியில் நாம் எண்ணுகிற ராகுல்காந்திதான் பிரதமராக வரப்போகிறார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ராகுல் பிரதமராக வருகிற நேரத்தில் பல நன்மைகளை இந்தத் தமிழகத்துக்கு பெற்றுத்தர முடியும்.
இன்னாரின் பேரன், இன்னாரின் மகன் என்பதற்காக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு, இந்தத் தொகுதி கிடைத்ததாக நான் கருதவில்லை. திறமைசாலி, தைரியசாலி, போராட்டக்காரர் என்பதால்தான் இந்தத் தொகுதி அவருக்குக் கிடைத்திருக்கிறது. இதை ஏன் நான் குறிப்பிடுகிறேன் என்றால், எதிரணியில் இளங்கோவனை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளராக நிற்பது யார் என்பது உங்களுக்கே தெரியும்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன் மகனுக்கு இந்தத் தொகுதியை வழங்கி இருக்கின்றார். ஓ.பி.எஸ். மகன் என்ற தகுதியைத் தவிர வேறு ஏதாவது தகுதி அந்த வேட்பாளருக்கு உண்டா? ஜெயலலிதா மாத்திரம் உயிரோடு இருந்திருந்தால், பன்னீர்செல்வம் தன் மகனுக்கு சீட்டு வாங்கி இருக்க முடியுமா? கடந்த சட்டப்பேரவை தேர்தலில், பன்னீர்செல்வத்துக்கு சீட்டு கிடைப்பதே திணறலாக இருந்தது.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.