ஆண்டிப்பட்டி அருகே அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
ஆண்டிப்பட்டி அருகே அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
தேனி அல்லிநகரம் கம்போஸ்டு தெருவை சேர்ந்தவர் சென்றாயன். (வயது 40) டீ மாஸ்டராக வேலைபார்த்து வந்தார். அவரது மனைவி சுதா (35).இவர்களுக்கு மணிகண்டன் (9) என்ற மகனும், அபிநயா (7) என்ற மகளும் உண்டு. இன்று காலை சென்றாயன் தனது குடும்பத்துடன் மகாசிவராத்திரியையொட்டி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லதேவன்பட்டியில் உள்ள குலதெய்வ கோவிலான அய்யனார்கோவிலுக்கு ஆட்டோவில் சென்றனர்.
இவர்களுடன் சென்றாயனின் மாமியார் பொன்னுத்தாய் (55) என்பவரும் சென்றார். ஆட்டோவை தேனி சுக்குவாடன் பட்டியை சேர்ந்த டிரைவர் ராமு(20) ஓட்டினார். இந்த ஆட்டோ தேனி- மதுரை சாலையில் கொண்டம நாயக்கன்பட்டியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ராமநாதபுரத்தில் இருந்து தேனி நோக்கி அரசு பேருந்து எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.
இதில் ஆட்டோவில் வந்த சுதா என்ற பெண்ணும் குழந்தைகளான அபிநயா, மணிகண்டன் ஆகியோரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட சென்றாயனும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ராமு, சென்றாயனின் மாமியார் பொன்னுத்தாய் ஆகியோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.