அமிர்த கலச யாத்திரை: தேனியில் இருந்து மண் கலசங்கள் டெல்லிக்கு அனுப்பி வைப்பு

By SG Balan  |  First Published Oct 29, 2023, 2:16 PM IST

தேனி மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட மண்ணை புனித கலசங்களில் எடுத்து வந்து அதனை டெல்லிக்கு அனுப்பும் நிகழ்ச்சி இன்று தேனி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.


தேனி மாவட்டத்தில் "என் மண் என் தேசம்" என்ற பாத யாத்திரையின் போது சேகரிக்கப்பட்ட மண் கலசங்கள் இன்று புதுடெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த ஜூலை 30ஆம் தேதி மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வரும் சுதந்திர தினத்தைக் கொண்டாட 'என் மண் என் தேசம்' என்ற இயக்கத்தைத் தொடங்குவதாக அறிவித்தார்.

Tap to resize

Latest Videos

"நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் உள்ள கிராமங்களில் இருந்து 7500 கலசங்களில் மண் எடுக்கப்பட்டு, அமிர்த கலச யாத்திரை தொடங்கி தலைநகர் டெல்லியை வந்தடையும். இந்த யாத்திரையில் எடுத்துவரப்பட்டும் மண்ணுடன் செடிகள், மரக்கன்றுகளும் கொண்டுவரப்படும். அவற்றைக் கொண்டு டெல்லியில் உள்ள தேசியப் போர் நினைவுச் சின்னத்திற்கு அருகிலேயே அமிர்த பூங்காவனம் உருவாக்கப்படும். இந்த அமிர்த பூங்காவனம், 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற முழக்கத்தின் மிக உன்னதமான அடையாளமாக இருக்கும்" என்றும் பிரதமர் சொன்னார்.

இதன்படி, நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள் மற்றும் தியாகிகளை நினைவு கூறும் வகையில் தேனி மாவட்ட நேரு யுவா கேந்திரா சார்பில் அமிர்த கலச யாத்திரை நிகழ்ச்சி தொடங்கப்பட்டு  அனைத்து கிராமங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டாரங்களிலும் சேகரிக்கப்பட்ட மண்ணை புனித கலசங்களில் எடுத்து வந்து அதனை டெல்லிக்கு அனுப்பும் நிகழ்ச்சி இன்று தேனி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

இதில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ராஜபாண்டியன்,நேரு யுவா கேந்திரா மாவட்ட பொறுப்பாளர் கோகுல், கல்லூரி மாணவிகள் மற்றும் நாட்டு நலத்திட்ட மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு தேசபக்தி கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர். பின்னர் மண் கலசங்களுக்கு மலர்களை தூவி  டெல்லிக்கு கொண்டு செல்வதற்காக எடுத்து சென்றனர்.

click me!