தேனியில் தனியார் அரிசி அரவை ஆலையில், ரேசன் அரிசியை குருணையாக அரைத்து வைத்துள்ளதாக புகார் எழுந்ததை தொடர்ந்து பறக்கும் படையினர் திடீர் ஆய்வு செய்து அங்கிருந்த குருணை அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து சென்றனர்.
தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட கக்கன் ஜி காலனியில் ரஃபிக் என்பவருக்கு சொந்தமான தனியார் அரிசி அரவை ஆலை உள்ளது. இந்த ஆலையில் ரேசன் அரிசியை குருணையாக அரைத்து தீவனங்களாக விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அரசி அரவை ஆலைக்கு வந்த குடிமைப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு பறக்கும் படையினர் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் ஆலையில் ரேசன் அரிசி ஏதும் சிக்கவில்லை.
குருணை அரிசி மூடைகள் மட்டுமே இருந்தது. அந்த குருணை அரிசி, ரேசன் அரிசியா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அங்கிருந்த 50 கிலோ எடையாக இருந்த 37 மூடைகள் என மொத்தம் 1,850கிலோ குருணை அரிசி மூட்டைகள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.