தமிழ்நாட்டில் கூடாரத்தை காலி செய்யும் கொரோனா.. தேனியில் இன்று ஒரே நாளில் 18 பேர் பூரண குணம்

By karthikeyan V  |  First Published Apr 16, 2020, 6:10 PM IST
தமிழ்நாடு கொரோனா பாதிப்பிலிருந்து வேகமாக மீண்டுவருகிறது. தேனியில் 18 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து தீவிரமாக அதிகரித்துவந்த நிலையில், கடந்த 3 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ள போதிலும், பாதிப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. நேற்று முன் தினம் வெறும் 31 பேரும் நேற்று 38 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,  இன்று மதியம் வரை வெறும் 25 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது. 

எனவே பாதிப்பு எண்ணிக்கை 1267ஆக உள்ளது. கடந்த 3 நாட்களில் வெறும் 94 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் வந்துள்ள அதேவேளையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. 


இன்று திருச்சியில் 32 பேர் மற்றும் சேலத்தில் 16 பேர் உட்பட மொத்தம் 62 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்திருந்த நிலையில் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 18 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை நேற்று மாலை நிலவரப்படி, 118ஆக இருந்தது. இந்நிலையில் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் பழனிசாமி, 180 பேர் குணமடைந்திருப்பதாக தெரிவித்தார்.  திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் குணமடைந்தோரும் இதில் அடங்குவர்.


இந்நிலையில், தேனி மாவட்டத்தில் 41 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர்களில் 18 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். அவர்களை தேனி அரசு மருத்துவமனை டீன் வழியனுப்பிவைத்தார்.

எனவே தமிழ்நாட்டில் மொத்தம் 198 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவரும் அதேவேளையில் குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இது, தமிழ்நாடு, கொரோனாவிலிருந்து அதிவேகமாக மீண்டுவருகிறது என்பதை உணர்த்துகிறது.
 
click me!