தஞ்சாவூர் மாப்பிள்ளைக்கும் - அமெரிக்கா மணப்பெண்ணுக்கும் தமிழ்முறைப்படி தேவாரம் திருவாசக பாடலுடன் கல்யாணம் நடைபெற்றது.
தஞ்சாவூரை சேர்ந்தவர் சங்கர நாராயணன் (வயது 35). இவர் பொறியியல் முடித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அமெரிக்கா மசாச்சூசெட்ஸ் பகுதியை சேர்ந்தவர் அன்னி டிக்சன் (35). இவர் எம்.ஏ. சைக்காலஜி படித்து விட்டு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் சங்கரநாராயணன் - அன்னி டிக்சன் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அன்னோன்யமாக காதலித்து வந்தனர். இதையடுத்து சங்கரநாராயணன் அமெரிக்க பெண்ணை காதலித்து வரும் விஷயத்தை தஞ்சையில் உள்ள தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர்களும் மகனின் காதலை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டனர். இதை போல் அன்னி டிக்சனும் தனது காதலைப் பெற்றோரிடம் தெரிவித்து சம்மதம் வாங்கினார்.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது. அதன்படி தஞ்சாவூரில் சங்கரநாராயணன் - அன்னி டிக்சன் திருமணம் நடைபெற்றது. தமிழ் முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் சங்கரநாராயணன் பெற்றோர், உறவினர்கள், அமெரிக்காவில் அவருடன் வேலை பார்த்த நண்பர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அன்னி டிக்சன் பெற்றோர், உறவினர்கள் கலந்து கொண்டனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
திருமணமானது தமிழில் வேத மந்திரங்கள் ஓதி நடைபெற்றது. மேலும் மணமகன் சங்கரநாராயணன் திருக்குறள் வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். விழாவில் அமெரிக்காவில் இருந்து வந்திருந்த அனைவரும் தமிழ் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை அணிந்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.