சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்த இளைஞரை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.
சென்னை பன்னாட்டு விமான நிலையம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த 18ம் தேதி பெரும்பாக்கத்தில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைத்த மர்ம நபர் சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடிக்கும் என கூறப்பட்டது. உடனடியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர் சேவை மையம் சார்பில் விமான நிலைய அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இண்டிகோ ஏர்லைன்ஸின் வாடிக்கையாளர் சேவை மைய புகாரின் அடிப்படையில் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், மிரட்டல் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை பகுப்பாய்வு செய்ததில் மிரட்டலானது தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் உள்ள ஒரு லேண்ட் லைன் எண்ணின் இணையதள இணைப்பு மூலம் அனுப்பப்பட்டது என தெரியவந்தது.
undefined
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை செய்தனர். அப்போது மிரட்டல் விடுத்தது திருவையாறைச் சேர்ந்த வி.பிரசன்னா(27) என தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை திருவையாறு சென்று பிரச்சன்னாவை கைது செய்தனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் அனுப்ப பயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி போன், இன்டர்நெட் மோடம் மற்றும் ரௌட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மாடு திருடி மாட்டிக்கொண்ட வடமாநில நபர்; சமயோஜித புத்தியால் 1 அடி கூட வாங்காமல் தப்பித்த சுவாரசியம்
விசாரணையில் சென்னை பெரம்பூரில் வசித்த குடும்பத்தினருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பியுள்ளார் என தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பிரசன்னா விசாரணைக்குப் பின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது போன்ற போலி வெடிகுண்டு மிரட்டல் வந்தால், பொதுமக்களின் பாதுகாப்பே முதல் முன்னுரிமை என்றும், இது போன்ற போலியான அழைப்புகள் அல்லது மின்னஞ்சல்கள் வந்தால், அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பொதுமக்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்குமாறு போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தி உள்ளார்.