தஞ்சையில் பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையின் கட்டை விரல் செவிலியரின் அலட்சியத்தால் துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் காட்டூரைச் சேர்ந்தவர் கணேசன், விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கும், பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு கடந்த 25ம் தேதி அன்று தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததாலும், தாயாரின் வயிற்றில் ஏதோ கோளாறு இருப்பதாலும் தாய் பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
undefined
எனவே பச்சிளம் குழந்தைக்கு ஊசி மூலமாக குளுக்கோஸ் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக குழந்தை சிகிச்சையில் இருந்த நிலையில், உடல் நலம் தேறியதால் இன்று டிஸ்சார்ஜ் செய்ய முடிவெடுத்துள்ளனர். எனவே குழந்தையின் கையில் குளுக்கோஸ் ஏற்றும் ஊசிக்காக போடப்பட்டிருந்த பேண்டேஜை செவிலியர் கத்திரிக்கோலால் துண்டிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது செவிலியரின் அலட்சியத்தால் குழந்தையின் கட்டை விரல் துண்டிக்கப்பட்டது.
அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகை என பல்வேறு பகுதிகளில் இருந்து தாய் சேய் நலனுக்காக பலரும் இங்கு தான் சிகிச்சைக்கு வருகின்றனர். அப்படியிருக்க பச்சிளம் குழந்தையின் விரல் துண்டான விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செவிலியரின் அலட்சியத்தால் துண்டிக்கப்பட்ட கட்டை விரலை மீண்டும் ஒட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இரண்டு நாட்களில் விரலை ஒட்டவைப்பது குறித்து தெரிய வரும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் செவிலியரின் அலட்சியம் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும் தஞ்சை அரசு மருத்துவமனையில் ஆர்.எம்.ஓ. உஷாதேவி விளக்கமளித்துள்ளார்.