தஞ்சாவூர் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றிலிருந்து மாணவ, மாணவிகளை பாதுகாக்கும் விதமாக கடந்த 22ம் தேதி முதல் 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு காரணமாக 12ம் வகுப்பிற்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படவில்லை. அதேபோல் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களை தவிர பிறர் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் படிக்கலாம் என்றும், கல்லூரிக்கு வர வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போது மாணவர்களுக்கு நடைபெற்று வரும் கொரோனா பரிசோதனைகள் மூலமாக நாளுக்கு நாள் தொற்று அதிக அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முதன் முதலில் தஞ்சை அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் பள்ளியில் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து படிப்படியாக மற்ற பள்ளி, கல்லூரிகளில் கொரோனா பரவி வந்தது. எனவே பரிசோதனைகளை துரிதப்படுத்தியதில் 13 பள்ளிகளைச் சேர்ந்த 185 மாணவர்கள், 3 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் 18 பேர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.இதில் நேற்றையை நிலவரப்படி 115 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
தஞ்சாவூர் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை கல்லூரியில் புதிதாக 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 225 ஆக அதிகரித்திருந்த நிலையில், இன்று காலை வெளியான பரிசோதனை முடிவுகளின் படி கும்பகோணத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் 3 பேருக்கும், ஒரு மாணவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தஞ்சாவூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.