மாமன்னர் ராஜராஜசோழன் சதயவிழா இனி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற முதலமைச்சர் அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இனி தஞ்சாவூரில் மட்டும் கொண்டாடப்பட்ட வந்த சதய விழா, தமிழகம் முழுவதும் வெகுவிமர்சையாக நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சாவூர் பெரிய கோவிலை எழுப்பிய மாமன்னர் ராஜராஜ சோழன் ஜப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்ததால், அந்நாள் ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் 1,037வது சதயவிழா பெரியகோவிலில் நேற்று கோலாகலமாக மங்கள இசையுடன் தொடங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நேற்று பெரிய கோயில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மீக சொற்பொழிவு, பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இன்று , ராஜராஜசோழனின் 1,037வது சதய விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் படிக்க:ராஜராஜ சோழனின் பிறந்த நாள்..! இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பின்னர் கோவிலில் தேவார நூலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஓதுவார்களின் வீதி உலா நடைபெற்றது. அதனை தொடர்ந்து பெருவூடையாருக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். இன்று இரவு வீதிஉலாவுடன் சதய விழா நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் இனி ஆண்டுதோறும் ராஜராஜசோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதன்மூலம் இனி சதய விழாவிற்கு அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படும். அதுமட்டுமின்றி தஞ்சாவூரில் மட்டும் கொண்டாடப்பட்டு வந்த சதய விழா, தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும்.
மேலும் படிக்க:மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037வது சதய விழா.. விழா கோலம் பூண்ட தஞ்சாவூர்..
முன்னதாக அரண்மனை தேவஸ்தானத்தின் கீழ் நிதி வசூலிக்கப்பட்டது. மாவட்டம் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு, சதய விழா கொண்டாடப்பட்டது. இனி சதய விழாவிற்கு முழு நிதியும் அரசு சார்பில் வழங்கப்படும். இன்று சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூரில் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மாமன்னர் இராஜராஜ சோழன் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் தனது ட்விட்டரில்,” தஞ்சை பெரிய கோயிலைக் கட்டுவித்த கலைத்திறமும், களங்கண்ட போர்களில் எல்லாம் வெற்றி முரசம் கொட்டிய தீரமும் உடைய மும்முடிச் சோழன் இராஜராஜனின் புகழ் வரலாற்று வானில் துருவ நட்சத்திரமாய் என்றும் மின்னும். அரசர்க்கரசர் பிறந்த ஐப்பசி சதய நாள் இனி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் பேரரசர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகள், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், நிர்வாகத்திறன் ஆகியவற்றுக்கு அவர் எப்போதும் உத்வேகமாக இருப்பார்கள். மேலும்,அவரது ஆட்சியில் 'தமிழகம்' ஆழ்ந்த ஆன்மீக பண்பாட்டு எழுச்சி பெற்றது என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.