தஞ்சை பெரிய கோயிலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் அன்னபூரனி தேவி கலந்து கொண்டார்.
சர்வதேச யோகா தினம் கொண்டாட்டங்கள் நாடு முழுக்க நடைபெற்றது. எட்டாவது சர்வதேச யோகா தினத்தன்று மனித குலத்திற்கான யோகா என்ற பெயரில் நாடு முழுக்க சுமார் 75 புகழ் பெற்ற புராதன மையங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மஹரிஷி வித்யா மந்திர் பள்ளி, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய சிறப்பு கொண்டாட்டம், உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான தஞ்சை பெரிய கோயிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்வித்துறைக்கான மத்திய இணை அமைச்சர் அன்னபூரனி தேவி கலந்து கொண்டார்.
விழிப்புணர்வு நோக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 15 ஆசிரியர்கள், 120 மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனங்கள் மற்றும் சூரிய நமஸ்காரம் உள்ளிட்டவைகளை செய்து காண்பித்தனர். முன்னதாக, எட்டாவது சர்வதேச யோகா தினத்தன்று தஞ்சாவூரை தலைமையிடமாகக் கொண்டுள்ள மத்திய அரசின் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் டி.எஸ்.பி. பிருந்தா தலைமை வகித்தார். இதில் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு யோகாசனங்களை செய்து காண்பித்தனர். இதுதவிர மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் சார்பில் கூட்டு தியானம், ரிதமிக் யோகாசனம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில், ”பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பள்ளி சார்பில் தினமும் யோகாசனங்களை செய்து பயன் பெறுவோம் என்று வாக்குறுதி அளிக்கிறோம்” என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது..