உங்களால் இரண்டு நாள் கூட வீட்டில் இருக்க முடிய வில்லையே. என்னால் மட்டும் கடந்த முப்பது ஆண்டுகளாக எப்படி தனியாக இருக்க முடிகிறது வீட்டில் . எனக்கும் ஆசைகள் பல உண்டு. ஆனால் என்ன செய்வது காலத்தின் கட்டாயம் இருந்துதான் ஆகவேண்டும்.
கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 23ம் தேதி இரவு 8 மணி அளவில் மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். அதன்படி 24ம் தேதி நள்ளிரவில் இருந்து இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடைகள், வணிக வளாகங்கள், தொழில்நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு மக்கள் வீட்டில் இருக்க அரசு அறிவித்திருக்கிறது. பொதுமக்கள் யாரும் வெளியிடங்களுக்கு சுற்றித்திரியாது வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அப்போது தான் கொரோனா தொற்று வேகமாக பரவுவதை நம்மால் தடுக்க இயலும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
எனினும் பல இடங்களில் அதிக பிரசங்கி தனமாக இளைஞர்கள் வாகனங்களில் சுற்றி வருகின்றனர். ஆள் இல்லாத சாலைகளில் சென்று காணொளி எடுப்பது, அதை டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்ஸ் வாங்குவது என்கிற நோக்கில் ஆபத்தை உணராது செயல்படுகின்றனர். இப்படிப்பட்ட இளைஞர்களை காவல்துறை தற்போது தங்கள் பாணியில் கவனித்து வருகின்றனர். இதனால் அத்தியாவசிய பொருள்கள் வாங்கச் செல்பவர்களும் தேவையின்றி பாதிக்கப்படுகின்றனர். இந்தநிலையில் இவ்வாறு பொறுப்பற்று சுற்றித்திரியும் இளைஞர்களுக்கு மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவுராணி பகுதியைச் சேர்ந்த பழனிவேல் என்கிற 30 வயது வாலிபர் பிறவியில் இருந்து கால்கள் அற்றவர். அவர் தனது முகநூல் பதிவில் மக்களுக்கும் பொறுப்பற்று திரியும் இளைஞர்களுக்கும் வேண்டுகோள் ஒன்று விடுத்திருக்கிறார்.அதில், ' உங்களால் இரண்டு நாள் கூட வீட்டில் இருக்க முடிய வில்லையே. என்னால் மட்டும் கடந்த முப்பது ஆண்டுகளாக எப்படி தனியாக இருக்க முடிகிறது வீட்டில் . எனக்கும் ஆசைகள் பல உண்டு. ஆனால் என்ன செய்வது காலத்தின் கட்டாயம் இருந்துதான் ஆகவேண்டும். என் அன்பு நண்பர்களே என்னை போன்றவர்கள் இந்த உலகில் பலர் உண்டு . இந்த உலகம் எப்பொழுதும் ஒரேமாதிரியாக இயங்கும் என்று சொல்ல முடியாது. கொரொனா போன்ற கொடிய வைரஸ்கள் பரவகின்ற பொழுது நாம் ஒவ்வொருவரும் காத்துக்கொண்டால்தான் நம் வீட்டில் உள்ளோரையும், நம் ஊரையும், நம் நாட்டையும் நம்மால் காப்பாற்ற முடியும். தயவுசெய்து வீட்டை விட்டு வெளியே சுற்றுவதை நிறுத்துங்கள்' என உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதை பலர் விரும்பியும் பகிர்ந்தும் வருகின்றனர்.
பழனிவேல் போன்றவர்கள் கூறுவதை கேட்டாவது வீம்புக்கு வெளியில் சுற்றும் இளைஞர்கள் திருந்துவார்களா..?