தமிழகத்திற்கு எதிராக சதி! மத்திய அரசை கண்டித்து டெல்டாவில் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு.!

By vinoth kumarFirst Published Sep 14, 2023, 3:03 PM IST
Highlights

உச்சநீதிமன்ற வழக்கு தீர்ப்பும் தமிழ்நாட்டுக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை. இதனால் தமிழ்நாடு சம்பாவையும் இழக்கப் போகிற பேராபத்து ஏற்பட்டுள்ளது. 

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்யும் மத்திய அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் செப்டம்பர் 19 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என பி.ஆர். பாண்டியன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன்;- காவிரி டெல்டா மிகப் பெரிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதன் அடிப்படையில், கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டாலும் போதுமான அளவில் விடவில்லை. காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மத்திய அரசின் பிரதிநிதிகள் தமிழ்நாடு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். குறிப்பாக குருவை என்கிற பெயரில் காவிரி நீரை வீணடித்து விட்டார்கள் என்று கூறியுள்ளனர். 

இதைத் தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசும் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராக சதி திட்டத்தில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. ஆணையத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள மத்திய அரசு முயற்சி செய்கிறது. மத்திய அரசின் துரோகம் தமிழ்நாட்டுக்கு எதிராக காவிரி பிரச்னையில் தமிழக விவசாயிகளை அழிக்கும் நோக்கோடு அரசியல் சுயலாபத்துக்காகச் செயல்படுகிறது. உச்சநீதிமன்ற வழக்கு தீர்ப்பும் தமிழ்நாட்டுக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை. இதனால் தமிழ்நாடு சம்பாவையும் இழக்கப் போகிற பேராபத்து ஏற்பட்டுள்ளது. 

தன்னாட்சி அதிகாரத்தோடு காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் செப்டம்பர் 19ம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களான  தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாபெரும் ரயில் மறியல் போராட்டத்தை நடத்த உள்ளோம். இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகள், அனைத்து அமைப்புகள் அரசு ஆதரவோடு முழு அடைப்பு போராட்டத்தை அக்டோபர் 2வது வாரத்தில் நடத்த உள்ளோம் என பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார். 

click me!